சமீபத்திய பதிவுகள்:


Posted by : Unknown திங்கள், 7 ஏப்ரல், 2014

            இப்பூவுலகில் நம்முடைய வாழ்வானது, மரணத்தை நோக்கி 100,99,98,… என ஒவ்வொரு எண்ணாகக்  குறைந்து வருவதற்கு ஒப்பாக இருக்கிறது என்று கூறலாம். இப்படி ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கை குறைந்து குறைந்துமுடிவில் நாம் மரித்து நம் சரீரத்தைவிட்டுப் போகும்நாள் வரைக்கும் எண்ணப்படுகிறது. அதற்கு பிறகு என்ன?
            நமது மரணத்திற்குப் பின்பு, நம் ஒவ்வொருவருடைய வாழ்வைக் குறித்ததானக் கணக்கை நாம் தேவனுக்கு முன்பாக ஒப்புவிக்கவேண்டுமென்று பரிசுத்த வேதம் திட்டமும் தெளிவுமாய் கூறுகிறது. ‘இவ்வுலகில் வாழ்ந்த கோடானுக்கோடி மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் செய்த, பேசிய, சிந்தித்த ஒவ்வொன்றையும் தேவன் எப்படி பதிவுசெய்து வைக்கமுடியும்?’ என்று நாம் ஒரு கேள்விக் கேட்கலாம். யோசிக்க வேண்டியக் கேள்வியானாலும் இதற்கு ஆச்சரியமான பதிலுண்டு. ஆம், யோசனையில் பெரிய நம் தேவன், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் ஞாபகசக்தியிலே அவனுடைய அனைத்து நடவடிக்கைகளையும் வைத்திருக்கிறார்.
            நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இந்த ஞாபக சக்தி நாம் செய்கிற, பேசுகிற, நினைக்கிற ஒவ்வொன்றையும் அப்படியே பதிவு செய்கிற வீடியோ டேப் போன்றதாகும். ஒருவன் மரிக்கும்போது அவனது சரீரம் மண்ணுக்கு சென்றாலும், அவனது ஆத்துமாவானது விண்ணுலகம் செல்கிறது. உலக நியாயத்தீர்ப்பின் நாள் வரும்போது, தேவனுக்கு முன்பாக தனி மனிதனாய் நின்று தன் முழு வாழ்க்கையின் கணக்கையும் ஓப்புவிக்க வேண்டும். எப்படி? ஒவ்வொரு மனிதனுடைய முறை வரும்போதும் அவனுக்குள் இருக்கும் ஞாபக சக்தியின் வீடியோ டேப் அனைவரும் காணும்படியாகத் திரையிடப்படும். அதை மறுத்து எதுவும் சொல்லமுடியாது. உண்மையான உள்மனிதன் அன்று வெளிப்படுத்தப்படுவான். ஆயினும், நியாய்த்தீர்ப்பு நாளில் நம் தீய, பாவ செயல்கள் வெளியரங்கமாக்கப்படாமல் அழிக்கப்பட ஒரே ஒரு வழியுண்டு. நம் பாவங்களுக்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையுண்டு, மரித்து மீண்டும் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார் என்ற சத்தியத்தை விசுவாசித்து, நம் பாவங்களை ஒத்துக்கொண்டு, அவைகளை விட்டு மனந்திரும்பி தேவனிடத்தில் பாவ மன்னிப்புக் கேட்டால் அனைத்துப் பாவங்களும் நிரந்தரமாய் அழிக்கப்பட முடியும்.
            நண்பனே! ‘வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை. வெளிக்குவராத மறைபொருளுமில்லை’ (மாற்கு 4:22) என்று இயேசு கிறிஸ்து கூறியுள்ளதை நீ அறிவாயோ? ஆகவே, மனிதர்கள் உன்னை கவனித்தாலும், கவனிக்காவிட்டாலும் உன் செயல்கள் நல்லவைகளாகவே இருக்கட்டும். தேவனுடைய கண்களுக்கு மறைவானது ஒன்றுமில்லை அல்லவா? ஆம்! உன் இளமையைக் குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு (Iதீமோத்தேயு 4:12). அப்போது, நியாயத்தீர்ப்பின் நாள் உனக்கு வெட்கத்திற்குரிய நாளாயிராது.
நன்றி: சகோதரர் சகரியா

(கிராம மிஷனெரி இயக்கம்)

Tags: Last days, judging days, Bible Judgement day

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments